Thursday, March 6, 2008

மஹா சிவராத்திரி

சிவபெருமான் துதி

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். ---- சேக்கிழார்

நடராஜர் பதிகம்

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே !
ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த ஜோதி ரூபனே !
மங்களங்கள்யாவும் யாவும் நல்கும் அம்பிகை மணானே
மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே !

எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம்; தொடுத்த கூரை கோபுரம்;
செந்தமிழ்ச் சொல் மந்திரம்; திருந்தும் அன்பே ஆகமம்;
சிவந்த பாத பங்கையம் உவந்தருள் நடேசனே !

மன்றிலே எடுத்தகால் என் மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைத்தநன்மை விரைவிலே முடித்துவை;
என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்துவை;
ஏற்றும் அன்பர் குழுவில் என்னைச் சேர்த்துவை நடேசனே !

ஆபயந்த ஐந்தினோடு பால், பழம், பஞ்சாமிர்தம்
ஆலவாய்க் கரும்பு, தெங்குத் தேன், சுகந்த சந்தனம்
நீ பயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே !
நேர்த்தியாய் அனைத்தும் ஆடி வாழ்த்துவாய் நடேசனே !

அட்டநாக பூஷணம் அளிக்க வல்லன் அல்லனே !
ஆனை, மான், சிறுத்தை வேட்டை ஆட வல்லன் அல்லனே !
இட்டமாலை ஆடையோடு தொட்டு வைத்த சந்தனம்
என்றும் நல்க வல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே !

வில்லினால் அடிக்கவோ ? வீசுகல் பொறுக்கவோ ?
மிதித்தபோது கை, பிரம்பை மேலும் நான் எடுக்கவோ ?
நல்லபிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ ?
நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே !

ஆட, நீ எடுத்ததாய் அறிந்தவர் இயம்புவர்
அல்ல அல்ல என் தலைமேல் சூட என்று சொல்கிறேன் !
ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தகால்
எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே !

மழுவெடுத்(து) எதைவிளக்க மன்றுதோறும் ஓடினாய் ?
மதியெடுத்த சிரம் இருக்க மத்தனாய் ஏன் ஆடினாய் ?
கழுதெடுத்து நடனம் ஆடும் காட்டில் என்ன தேடினாய் ?
கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே !

எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே !
இன்று நான் படைத்த யாவும் உண்ணுவாய் சபேசனே!
தடுத்த பண்டை வினையகற்றி தாங்குவாய் சர்வேசனே !
சரணம் உன்னை அன்றி ஏது ? தாங்குவாய் நடேசனே !

வாழி நீ படைக்கும் தெய்வம் மலர் அணை அமர்ந்ததாம் !
வகுத்தளிக்கும் தெய்வம்கூட அரவணை கிடந்ததாம் !
ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே !
ஓய்ந்து சற்றென் நெஞ்சணைக்கண் சாய்ந்துகொள் நடேசனே !

ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம: ரூபனே !
ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே ! சங்கீதனே !
வாமியாய்த் தழைத்த சிவகாமி காதல் நேசனே !
மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே ! -----
அருட்கவி கு.செ. இராமசாமி

Wednesday, March 5, 2008

இன்று மகா சிவராத்திரி

இன்று மகா சிவராத்திரி தேவகோட்டை அருகில் உள்ள கோட்டூரில் சௌந்தர நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருகோவில்லில் சிறப்பாக நடைபெறும். மூன்றாவது காலம் பூஜை ஸ்ரீ மஹா காளருக்கு நடைபெறுவது மிக சிறப்பாகும்.

கோவையில் இஷா யோகா மையத்திலும் மகா சிவராத்திரி மிக சிறப்பாக நடைபெறும்.

தேவகோட்டை நகரத்தார்

நன்றி வணக்கம்
அன்புடன் உங்களை தேவகோட்டை நகரத்தார் வெப் ப்ளாக்க்கு வரவேற்கிறோம் .

இது எங்களது முதல் பதிவாகும்




உ
சிவமயம்
விநாயகர் வணக்கம்

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்
எங்கள் குலவிடிவிளக்கே எழில்மணியே கணபதியே !

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்பித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பன் அவன் மடி அமரும் அருட்கனியே கணபதியே !

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கு உக்கியிட்டு
எள்ளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன் தமிழில் போற்றுகின்றேன்
உள்ளியதை உள்படி உகந்தளிப்பாய் கணபதியே !

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன் வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்றுகின்றேன்.