Thursday, March 6, 2008

மஹா சிவராத்திரி

சிவபெருமான் துதி

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். ---- சேக்கிழார்

நடராஜர் பதிகம்

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே !
ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த ஜோதி ரூபனே !
மங்களங்கள்யாவும் யாவும் நல்கும் அம்பிகை மணானே
மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே !

எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம்; தொடுத்த கூரை கோபுரம்;
செந்தமிழ்ச் சொல் மந்திரம்; திருந்தும் அன்பே ஆகமம்;
சிவந்த பாத பங்கையம் உவந்தருள் நடேசனே !

மன்றிலே எடுத்தகால் என் மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைத்தநன்மை விரைவிலே முடித்துவை;
என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்துவை;
ஏற்றும் அன்பர் குழுவில் என்னைச் சேர்த்துவை நடேசனே !

ஆபயந்த ஐந்தினோடு பால், பழம், பஞ்சாமிர்தம்
ஆலவாய்க் கரும்பு, தெங்குத் தேன், சுகந்த சந்தனம்
நீ பயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே !
நேர்த்தியாய் அனைத்தும் ஆடி வாழ்த்துவாய் நடேசனே !

அட்டநாக பூஷணம் அளிக்க வல்லன் அல்லனே !
ஆனை, மான், சிறுத்தை வேட்டை ஆட வல்லன் அல்லனே !
இட்டமாலை ஆடையோடு தொட்டு வைத்த சந்தனம்
என்றும் நல்க வல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே !

வில்லினால் அடிக்கவோ ? வீசுகல் பொறுக்கவோ ?
மிதித்தபோது கை, பிரம்பை மேலும் நான் எடுக்கவோ ?
நல்லபிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ ?
நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே !

ஆட, நீ எடுத்ததாய் அறிந்தவர் இயம்புவர்
அல்ல அல்ல என் தலைமேல் சூட என்று சொல்கிறேன் !
ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தகால்
எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே !

மழுவெடுத்(து) எதைவிளக்க மன்றுதோறும் ஓடினாய் ?
மதியெடுத்த சிரம் இருக்க மத்தனாய் ஏன் ஆடினாய் ?
கழுதெடுத்து நடனம் ஆடும் காட்டில் என்ன தேடினாய் ?
கையில் நான் எடுத்த தூபம் கொள்ளுவாய் நடேசனே !

எடுத்த தூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே !
இன்று நான் படைத்த யாவும் உண்ணுவாய் சபேசனே!
தடுத்த பண்டை வினையகற்றி தாங்குவாய் சர்வேசனே !
சரணம் உன்னை அன்றி ஏது ? தாங்குவாய் நடேசனே !

வாழி நீ படைக்கும் தெய்வம் மலர் அணை அமர்ந்ததாம் !
வகுத்தளிக்கும் தெய்வம்கூட அரவணை கிடந்ததாம் !
ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே !
ஓய்ந்து சற்றென் நெஞ்சணைக்கண் சாய்ந்துகொள் நடேசனே !

ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம: ரூபனே !
ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே ! சங்கீதனே !
வாமியாய்த் தழைத்த சிவகாமி காதல் நேசனே !
மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே ! -----
அருட்கவி கு.செ. இராமசாமி

No comments: